Wednesday, July 27, 2011

அவன்? - மப்பாசன்

பிரெஞ்சு  எழுத்தாளர் மப்பசானின் (Guy de maupassant)       சிறுகதை- அவன்?  (He?) மொழியாக்கம்

அவன்?  

               எனதருமை நண்பனே, எந்தவகையிலும் இதை புரிந்துகொள்ள முடியவில்லையென  கூறினாலும், உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியமாகி வருவதாக நீ கருதுகிறாய் இல்லையா?, ஒருவேளை உண்மையாக இருக்கலாம், ஆனால்  நீ நினைக்கும் காரணங்களுக்காக இல்லை.

                ஆம், நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். அந்த முடிவினை நோக்கி இட்டு சென்ற சம்பவத்தைப் பற்றி கூறுகிறேன்.

                என்னுடைய கொள்கைகளும், திடநம்பிக்கைகள் சிலவும் மாறவேயில்லைதான். நான்  இன்றும் சட்டப்பூர்வமாக சேர்ந்துவாழ்வதை  முற்றிலும் மடத்தனமான சம்பிரதாயமாகவே பார்க்கிறேன், ஏனென்றால் பத்திற்கு ஒன்பது கணவன்மார்கள் மனைவிக்கு துரோகம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் என்பது என் உறுதியான எண்ணம்.  அவர்கள்  சுதந்திரத்தை துறந்து, அசட்டுத்தனமாக தானாகவே முன்வந்து காதலின் கைவிலங்குகளுக்குள் வாழ்க்கையை மாட்டி விட்டதால், அனுதாபப்படவும் தகுதியில்லாதவர்கள்.  வசீகரமான பெண்களை நோக்கி இடைவிடாது, பறக்கும் கற்பனை சிறகுகளை வெட்டிவிட்ட பரிதாபத்திற்குரியவர்கள். நான் சொல்வதன் பொருள் உனக்கு நன்றாகவே தெரியும். என்னால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே காதலிப்பது எந்த ஒரு தருணத்திலும் இயலாது என உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால் எப்போதும் அளவுகடந்த ஆசையுடன் பெண்கள் அனைவரையும் ஆராதிக்கிறேன். ஒரே நேரத்தில், விதம்விதமான மோகனப் பெண்களின் பெருந்திரளை, என்னுடைய அணைப்பிற்குள் கொண்டு வர, ஆயிரம் கரங்களையும், ஆயிரம் உதடுகளையும், ஆயிரம் உணர்ச்சிமிகு இதயங்களையும் வேண்டி விரும்புகிறேன்.

               இருந்தாலும், நான் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன்.

                அதோடு, என் மனைவியாகவிருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி நான் அறிந்தது, மிகவும் குறைவே. அவளை நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன். உவப்பில்லாதது எதுவும்  அவளிடம் இல்லையென்பதே இப்போதைய என் தேவைக்கு போதுமானது. அவள் தடித்த, குட்டையான , சிவந்த பெண், ஆதலால், நாளை மறுநாளே நிச்சயமாக ஒல்லியான, உயரமான, கருத்த ஒரு பெண்ணிற்காக நான் ஆசைகொள்ளலாம்.

              அவளொன்றும் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணுமில்லை, சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவள் ஒரு வகையில், திருமண பந்தத்திற்காக பொருத்தமான வரையறைக்குள்  வளர்க்கப்பட்ட, எங்கும் காணக்கிடைக்கும் உதாரண மங்கை. அதே சமயம் வெளித்தோற்றத்தில் எந்தவிதமான குறையும் இல்லாமல், அதைத் தவிர வேறெந்த கவரும் அம்சங்களும் கிடைக்க பெறாதவள்கூடத்தான்.  அண்டை வீட்டார், உற்றார் உறவினர்களால் இன்று அவள்செல்வி. லஜோலா ஒரு பண்பான பெண்.” எனவும், இன்னும் சில நாட்களுக்குப் பிறகுதிருமதி. லஜோலா என்ன ஒரு அருமையான இல்லத்தரசி!!” எனவும் அழைக்கப்படுவதற்கு ஏற்றவள். ஒரே வரியில் சொல்வதென்றால், நமக்கு மனைவியாக இருக்கும் அந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு எல்லா பெண்களிடமும் நாட்டம் இருப்பதை நாம் உணரும் நாள் வரை, நம்மைப் போன்றவர்களுக்கு மிகப் பொருத்தமான மனைவியாக அமையப் போகும் , எண்ணற்ற பெண்கள்கூட்டத்தில் ஒருத்திதான்  இவள்.

             ”இதெல்லாம் சரிதான், பிறகு என்ன காரணத்திற்காக நீ திருமணம் செய்யப் போகிறாய்????” என்று நீ என்னிடம் கேட்பாய்.

             இந்த மடத்தனமான செயலை செய்யத் தூண்டிய அந்த விசித்திரமான, நம்பமுடியாத காரணத்தை உன்னிடம் வெளிப்படையாக சொல்வதற்கு தயக்கமாக உள்ளது. இருந்தாலும் சொல்கிறேன். என்னைதனிமைஅச்சுறுத்தி துரத்துகிறது. இதை எப்படி சொல்லி , உனக்குப் புரிய வைக்கப் போகிறேன் எனத்தெரியவில்லை. என்மனப்பிறழ்வு கண்டு, நீ இரக்கப்படலாம் அல்லது என்னை இகழ்ந்து வெறுத்து ஒதுக்கலாம். நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், இனிமேல் என்னால்  இரவில் தனியாக இருக்க இயலாது. எனதருகில் ஒரு மனித இருப்பையாவது நான் உணர வேண்டும், என்னைத் தொட, என்னுடன் உரையாட, யாராவது எனக்கு வேண்டும்.

           எதிர்பாராத கணங்களில் என் மனதில் தோன்றும் கேள்விகளை பொருட்படுத்தி  காது கொடுத்து கேட்பதற்கும், எப்போதும் ஒரு விழித்திருக்கும் ஆன்மாவையாவது நெருக்கமாக உணருவதற்கும், நான் சோர்வுற்று இளைப்பாறும் போது,  ஒரு மனிதக் குரலையாவது கேட்பதற்கும், பதற்றத்துடன் மெழுகுவர்த்தி ஏற்றும் தருணங்களில் அந்த மங்கிய விளக்கொளியில் ஒரு மனித முகத்தையாவது பார்ப்பதற்கும், எவராவது ஒருவராவது என்னருகே வேண்டும்.ஏனென்றால்ஏனென்றால்வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்... ”தனிமையைக் கண்டு நான் பயப்படுகிறேன்”.

             , நண்பனே, இன்னும் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை தானே!!!

             உயிர்கொல்லும் அபாயங்களை கண்டு கூட நான் ஒருபோதும் அச்சப்படதில்லை, திடீரென்று அறைக்குள் புகுந்த முன்பின் தெரியாத வேற்று மனிதனை, துளி கூட நடுக்கமில்லாமல் என்னால் இப்பொதும் கொலை செய்ய முடியும். பேய், பிசாசுகளை பற்றி எனக்கு பயமில்லை. வேறு எந்த மூடநம்பிக்கைகளும் இல்லாதவன்தான். இறந்த மனிதர்களின் நினைவுகள்கூட என்னை அச்சுறுத்துவதில்லை, மரணத்திற்குப் பிறகு உடலோடு சேர்ந்து ஆன்மாவும் பூரணமாக இந்த மண்ணிலிருந்து அழிகிறது என நம்புகிறவனும் தான். இருப்பினும்....

             அதை.. அதைஅதைச் சொல்லியே ஆக வேண்டும், எனக்கு என் மீதுதான் பயம். புரிந்து கொள்ளமுடியாத, பயங்கரமான, கலவர நிலையில் என்னை எப்போதும் வைத்திருக்கும் அந்த தனிமையின் மீதுதான் பயம்.

             நீ என் நிலையை நினைத்து மனமார சிரிக்கலாம், இந்த கொடூரமான பயத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. என்னை சுற்றி எழும்பியுள்ள சுவர்களும், இந்த அறைகலன்களும், உயிருள்ளைவை போன்று தோற்றம்தரும் இந்த பொருட்களும், என் மிருக வாழ்க்கையை மீண்டும் மீண்டும் நினைவூட்டி அச்சுறுத்துகின்றன. இதையெல்லாம் விட, விடாது துரத்தும் ஒரு எண்ணம், என்னை விட்டு விலகியது என நான் நம்பிக்கையுடன் இளைப்பாற போகும் கணங்களில், விளங்கமுடியாத, தாங்கொண்ணா வலியுடன், என்னை சட்டென்று என்னை பற்றிக் கொள்ளும், அந்தகாரணம்என்னை அச்சுறுத்துகிறது.

            எப்போதும் முதலில், ஒரு வகையான இனம்புரியாத மன உலைச்சலை உணரச்செய்து, முழு உடலையும் நடுங்கச் செய்கிறது, அந்த அச்சம். என்னைச் சுற்றி ஒருவர் கூட இல்லையென தெரிந்த வினாடியில், தொட்டுணரத்தக்க யாரவது ஒருவராவது வேண்டுமென ஏங்க வைக்கிறது.  எனக்குள்ளேயே நான் பேசினால் கூட, என் குரலே என்னை பயமுறுத்துகிறது. என்னைத் தவிர என் வீட்டினுள் யாருமில்லையன நிச்சயமாக தெரிந்தாலும் கூட, நான் வீட்டுக்குள் நடக்கும் போது, கதவிற்குப் பின்னால், திரைச்சீலைகளுக்குப் பின்னால், அலமாரிக்குப் பின்னால் தேட வைக்கிறது. சட்டென்று திரும்பும் கணங்களில், எனக்குப் பின்னால் எதுவுமில்லை என்ன புரிந்து கொண்டாலும், அதுவே பயம் கொள்ளச் செய்கிறது.

            நாளாக நாளாக அந்த தனிமையின் அச்சம் என்னை ஆட்டுவித்து, மேலும் மேலும் அதிகரிப்பது போல உணருகிறேன். என் அறைக்குள்ளேயே அடைபட்டு, படுக்கையில், என்னுடைய போர்வைக்குள்ளே, கூனிக்குறுகி, சுருண்டு படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடி அப்படியே நெடு நேரம் அசையாமல் படுத்துக் கொள்கிறேன். எனதருகில் நீண்ட நேரமாக எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைக்கூட அணைக்க திராணியில்லாமல் அதனையே வெறித்து பார்க்கிறேன்.

           நண்பனே, இது மிகவும் கொடூரமான உணர்வு, இல்லையா?

           ஆனால், சில நாட்களுக்கு முன்பெல்லாம் நான் இவ்வாறு உணர்ந்ததில்லை. நான் வீட்டிற்கு வரும்போதும், எனது அறைகளுக்குள்ளுள் சென்று திரும்பும்போதும் எனது மன அமைதியை குலைக்கும் எதுவும் இருந்ததில்லை. என்னால் நம்பவேமுடியாத, இந்த மனக்கோளாறினால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என இதற்கு முன்னர் எவனாவது என்னிடம் கூறியிருந்தால், அவனை எள்ளி நகையாடியிருந்திருப்பேன்.  இருண்ட என் படுக்கை அறையின் கதவுகளை திறப்பதற்கெல்லாம் நான் எப்பொழுதும் பதற்றப்பட்டதேயில்லை. வழக்கமாக சோம்பலுடன், கதவை தாழிடாமல் சென்று படுக்கின்ற போதும், நடுஇரவில் திடுமென எழுந்து கதவுகள் தாழிட்டிருக்கிறதா என எப்போதும் நான் சரிபார்த்ததில்லை.

           இவையெல்லாம் முதன் முதலில் தொடங்கியது கடந்த வருடத்தின் ஈரம் போர்த்திய ஒரு இலையுதிர்காலத்தின் மாலைவேளையில்தான். அன்று இரவு உணவிற்குப் பின், பணியாள் அறையின் பணிகளை முடித்துவிட்டு விடைபெற்றுச் சென்ற வேளையில், எனக்குள்  நானே,  இன்றிரவு என்ன செய்யப்போகிறேனென கேட்டுக்கொண்டே,  மேல்மாடி அறையிலிருந்து மாடிப் படிக்கும், பின்பு மீண்டும் அறைக்கும் மேலும், கீழும் ஏறி இறங்கிக் கோண்டிருந்தேன். எந்த ஒரு வேலையை செய்யவும் கவனம் செல்லாமல், படிப்பறைக்கு சென்று படிக்கவும் மனதில் ஆவலில்லாமல், மிகவும் களைப்பாக இருந்தேன். அறைக்கு வெளியே, தூறலுடன் அழகிய மழை மெல்லிதாக பெய்து கொண்டிருந்தது, இருந்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை. தெளிவான எந்த ஒரு காரணமுமேயில்லாமல் ஒரு வகையான உளச்சோர்வுடன், இந்த மனச்சோர்வை பகிர யாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்குமே, என ஏக்கத்துடன் நடந்து கொண்டிருந்தேன்.

          மண்ணிற்கு அடியில் புதைத்துவிடும்படி தனிமை என்னை அழுத்த, சுற்றியிருந்த அறைகள் கூட என்றுமில்லாமல் முடிவில்லா வெறுமையுடன் இருப்பதாக தோன்றியது, அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன்? நினைவில்லையே!! ஆம், பதற்றத்துடன் கால்கள் நடுங்க காய்ச்சல் உண்டாவதற்கான அறிகுறிகளுடன் அமர்ந்திருந்தேன். எனவே, மீண்டும் நடக்கலாம் என எண்ணி எழுந்தேன். இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கட்டிக் கொண்டு, குதிக்காலால் அழுத்தி மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து, திடீரென முதுகுத் தண்டின் மையத்தில் கூர்மையாக சில்லிட்டது போல உணர்ந்தேன், ஜன்னல் வழியாக வந்த குளிர்ந்த காற்று அறையைத் தாண்டி வந்து என்னுள் ஊடுருவியிருக்கலாம். அதனால் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த அறையின் கணப்பு தொட்டியில் நெருப்பு மூட்டினேன். அதனருகிலேயே சிறிது நேரம் அமர்ந்து அந்த தணலையே உற்று பார்ந்து கொண்டிருந்தேன். சீக்கிரமே, பொறுமையிழந்து, அண்டை வீட்டு நண்பன் வீட்டில் இருக்கக்கூடுமென முடிவுசெய்து அவன் துணையை நாடி, அறையை விட்டு வெளியே கிளம்பினேன்.

          அவன் அங்கு இல்லை, இருமருங்கிலும் மரங்களின் வரிசையால் நிரம்பிய அந்த அகன்ற தெருவில், தெரிந்தவர் எவராவது ஒருவரின் துணயாவது கிடைக்குமா என காலார நடந்து சென்றேன்.

          ஆனால் அன்று துரதிஷ்டமான நாள், எங்குமே யாருமேயில்லை. அழுத்தமாக கவ்வியிருந்த மூடுபனிக்கு நடுவே, மெல்லிதான தூறலுடன், மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் நடந்து போன ஈரமான நடைபாதை என் முன்னால் சாலையோர விளக்கொளியில் மங்கலாக ஒளிர்வது போல தெரிந்தது.

           மெதுவாக நடந்து சென்ற நான் எனக்குள்ளே நொந்துகொண்டேன்இன்று ஒரு ஜீவன்கூட பேசுவதற்கு கிடைக்கப்போவதில்லை.”

       சிறிது தூரம் சென்று உணவகங்களையும், சாலையோர தேநீர் அருந்தகங்கள் சிலவற்றையும் நோட்டமிட்டேன். வரவழைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்ட சிற்றுண்டியைக் கூட உண்பதற்கு ஆற்றலில்லாமல், துயரம்தோய்ந்த முகங்களுடன் பல தனி மனிதர்கள்,  நாற்காலிகளை நிரப்பியிருப்பதாக எனக்குப்பட்டது.       

         பிறகு நெடுநேரம் இலக்கில்லாமல் இங்குமங்கும் உலாவிவிட்டு, மன அமைதியையும், சோர்வையும் ஒரே சமயத்தில் உணர்ந்தவுடன், நடுஇரவிற்கு சற்று முன்னதாக வீட்டிற்கு திரும்பினேன். வாயில்காப்பாளான் அவனின் வழக்கத்திற்கு மாறாக உடனே  வந்து கதவை திறந்து வழிவிட்டான். அந்த செய்கை யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும் எனக் காட்டியது.

             நான் வழக்கமாக வெளியே செல்லும் சமயங்களில், என் அறையின் கதவுகள் ஒன்றிற்கு இரண்டு முறை பூட்டப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துவிட்டுதான் செல்வேன்.  ஆனால் அன்று நான் வீடு திரும்பி என் அறைக்கு சென்றபோது, அது வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அதனைக் கண்டு வியப்படைந்தாலும். வெளியே சென்ற இடைவெளியில் எனக்கு யாராவது கடிதம் கொடுக்க அறைக்குள் வந்திருக்கலாமென எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

           என் அறைக்குள் நுழைந்த போது, கணப்பு தொட்டியில் நெருப்பு ஆரவாரமின்றி இன்னும் எரிந்துகொண்டிருந்தது, ஆனாலும் அறை ஒரளவிற்குதான் வெளிச்சமாக இருந்தது. அப்போது மெழுவர்த்தியை எடுத்து ஏற்றி வைக்க எத்தனித்தபோதுதான், யாரோ ஒருவர் கணப்பு தொட்டியின் நெருப்பிற்கு வெகு அருகில் கைநாற்காலியில் தேய்ந்து போன கால்களுடன், முதுகு மட்டும் தெரியும்படி அமர்ந்திருப்பதை கவனித்தேன்.

          திடீரென்று கவனித்தாலும், அந்த காட்சி என்னை கொஞ்சங்கூட அச்சமடையச் செய்யவில்லை. அவர் என் நண்பர்களில் ஒருவர் அல்லது என்னை பார்க்க வந்த யாராவது ஒருவராகத்தான் இருக்ககூடும் என முடிவுசெய்து கொண்டேன். நான் வெளியெ சென்ற சமயத்தில், வாயில்காப்பாளான் அவருக்கு என்னுடைய அறையின் மற்றொரு சாவியை கொடுத்திருக்ககூடும். வீடு திரும்பிய தருணத்தில் வாயில் கதவு உடனடியாக திறக்கப்பட்டதையும், என் அறைக்கதவு பூட்டப்படாமல், சாத்தப்பட்டிருந்ததையும் மீண்டும் நினைவிற்கு வந்தது.

      
            அந்த நண்பரின் பின்னந் தலையை தவிர வேறொன்றும் தெளிவாக எனக்கு தெரியவில்லை. எனக்காக காத்திருந்த சமயத்தில் அவர் களைத்து தூங்கியிருக்கிறார். அவரை எழுப்ப மெதுவாக அவருக்கு முன்னால் சென்றேன். இரண்டு கால்களையும் மடித்து வைத்து, வலது கையை மட்டும் கீழே தொங்கபோட்டு அமர்ந்திருந்தார், தலை இடது பக்கம் சாய்ந்திருந்ததால், அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது போல தோன்றியது. ”யாராக இருக்க கூடும்?” எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். அறையின் அந்த பகுதி இருட்டாக இருந்ததால், அவரின் முகம் சரியாக தெரியவில்லை. எனவே அவரின் தோளை குலுக்கி எழுப்புவதற்கு எனது வலது கையை மெதுவாக உயர்த்தி எடுத்து சென்றபோது, கைகள் நேராக நாற்காலியில் போய் முட்டியது. அங்கு யாருமேயில்லை. நாற்காலி காலியாக இருந்தது.

             திகிலில் என் உடல் சிலிர்த்து விறைத்து நின்றது. சாவகாசமாக நடந்து போகின்ற வழியில் நடுக்கமூட்டுகிற அபாயம் திடீரென முன்னால் வந்து நின்றால் அங்கிருந்து வேகமாக விலகுவது போல, அந்த காட்சியைக் கண்டு அனிச்சையாக சில அடிகள் நகர்ந்து பின்வாங்கினேன். சில நொடிகளில் என்னை தொகுத்துக்கொண்டு, வீராப்புடன், அப்படி என்னதான் நடக்கும் என கைநாற்காலிக்கு அருகில் மீண்டும் சென்றேன். மயங்கி விழப்போகும் தருணத்தில் இருப்பவன் போல, எண்ணங்கள் தாறுமாறாக சிதற, பதைபதைப்புடன், உறைந்து நின்றேன்.

            இயல்பாகவே நான் அசட்டு தைரியமிக்கவன், அதனால் சீக்கிரமே சமநிலைக்கு வந்தேன். “அட. இது வெறும் பிரமைப்பா!!”  என திரும்ப திரும்ப எனக்குள் சொல்லிக்கோண்டேன், மனதின் எண்ணங்கள் கட்டுப்பாடில்லாமல் அலைய, சில நிமிடங்கள் கடந்தன. இது உண்மையிலேயே வெறும் மனபிரமையாக இருக்கலாம். முன்னரே சில தருணங்கள் இதேபோல் மனபிரமையால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என என் நினவிற்கு வந்தது. எனது மனதிலோ, மூளையிலோ எந்த ஒரு கோளாறுமே இல்லை, அது கண்ணாடி போல தெளிவாகவும், தர்க்கபூர்வமாகவும் இயங்குகிறது. ஆனால் இந்த கண்களால்தான் ஏமாந்திருக்கிருக்கிறேன். நகரத்திற்கு புதிதாக வந்த பாமரன் தான் கண்ட முதல் சாதாரண காட்சியைக்கூட  அற்புதமென கருதி வியப்பதைப்போல, இந்த கண்கள் ஒரு சாதாரண நிகழ்வை மாயக்காட்சி போல கற்பனை செய்து என்னை தடுமாற வைத்திருக்கிறது. ஆம், அதீதமாக களைப்படைந்த கண்கள், அறைக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட பார்வைக்கோளாறால் உணரப்பட்ட வெறும் திரிபுக்காட்சிதான் வேறொன்றுமில்லை.
அறையின் அணைந்தபோன மெழுவர்த்தியை மீண்டும் ஏற்றினேன். அப்போது தணலின் நெருப்பை கிளர்ந்தெழச் செய்ய சில மரக்கட்டைகளை சேர்க்க குனிந்தபோது, திடீரென பின்னால் இருந்து என்னை யாரோ தொடுவது போலயிருந்தது. உடல் முழுவதும் விதிர்விதிர்க்க, சட்டென ஏதோ விசைதள்ளியது போல பீதியில் பின்னால் நகர்ந்தேன்.

          இந்த முறை எந்தவகையிலும் எனது இழந்த தைரியத்தை மீட்கமுடியவில்லை. தைரியம் வரவழைக்க எனக்கு தெரிந்த கடவுள் வாழ்த்துப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே, மாடிபடிகள் வழியாக வேகமாக கீழிறங்கி, வீட்டிற்கு வெளியே சென்று, வாயில்கதவை ஒன்றிக்கு இரண்டு முறை பூட்டிய பிறகுதான், ஓரளவிற்கு சமநிலைக்கு மீண்டேன். அறைக்குள் இந்த நேரத்தில், வேறு யாரும் வருவதற்கு வாய்ப்பேயில்லையே!!

 

வாயில்கதவருகே இருந்த சாலையோரத்து திண்டில் அறையில் நிகழ்ந்த அந்த எதிர்பாராத நிகழ்ச்சியை மனதில் போட்டு உருட்டிக்கொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தேன். முழுமன அமைதிக்கு திரும்பியிருக்கிறேன் என நம்பிக்கை வந்தவுடன்தான் அறைக்கு திரும்பினேன். அந்த கைநாற்காலி பக்கமே பார்வையை திருப்பாமல், நேராக சென்று எனது கட்டிலில் படுத்தேன். அறைக்குள் சில மணித்துளிகள், புதிராக எதுவும் நடக்காமல், விறைப்பான அமைதியுடன் கடந்தது. ஆனால் சீக்கிரமே அடக்கமுடியாத ஒரு உந்துதலுக்குள்ளாகி, அறையை சுற்றுமுற்றி நோட்டமிட்டுகக்கொண்டே, மெதுவாக ஆனால், தீர்க்கமாக அந்த மர்ம மனிதன் உட்கார்ந்திருந்த கைநாற்காலியை நோக்கி பார்வையை செலுத்தினேன்.
              அதனருகே கணப்பு தொட்டியில் நெருப்பு அணையப்போவது போல எரிந்துகொண்டிருந்தது. மீதமான சில நெருப்பு கங்குகளின் இளஞ்சிவப்பான ஒளியில், மங்கலாக தெரிந்த அதே நாற்காலியில், அதே போல வலது கையை தொங்க போட்டு, இரண்டு கால்களையும் மடித்து வைத்து, இடது பக்கம் தலை சாய்த்து தூங்கிக்கொண்டிருக்கும், அந்த மர்மமனிதன் மீண்டும் அங்கே அமர்ந்திருப்பது போல இருந்தது!!!
 

உடனே நெருப்புபெட்டியை எடுத்து, தீக்குச்சியை கொளுத்தி, அருகில் சென்று பார்த்தேன், இந்த முறையும் அங்கு யாருமேயில்லை. ஆத்திரத்துடன், அந்த நாற்காலியை கொண்டு போய், என் பார்வைக்கே படாத வகையில், கட்டிலுக்கு பின்னால் மறைத்துவைத்துவிட்டு, அறைமுழுவதும் துளி கூட வெளிச்சமில்லாமல் இருட்டாக்கிக் கொண்டு, மீண்டும் போர்வையை போர்த்தி கட்டிலில் தூங்குவதற்கு படுத்தேன். ஆனால் தூக்கத்தில் அமிழ்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே, அந்த இரவில் என்னை அச்சுறுத்திய காட்சிகள் அனைத்தும் உண்மையாக கண்முன் நடப்பது போல தெளிவாக கனவில் மீண்டும் தோன்றியது. உடனே அலறியடித்து கொண்டு எழுந்துவிட்டேன், மீண்டும் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை வெகு அருகிலேயே வைத்துக் கொண்டு, தூங்கவே கூடாதென தீர்மானித்து, தீர்க்கமாக படுக்கையிலேயெ அமர்ந்திருந்தேன். ஆனால், என்னையும் மீறி, கொஞ்ச நேரத்திலேயே தூங்கிப்போனேன். அன்றிரவு அதே கனவு பலமுறை வந்து என்னை பைத்தியமாக்கியது. கடைசியாக அதிகாலையில் எல்லாம் சரியாகி, மதியம் வரை அமைதியுடன் தூங்கினேன்.

தூங்கியெழுந்த மறுநாள் மதியம், முந்திய நாள் நிகழ்வுகள் எல்லாம் எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல இருந்தது. ”காயச்சலுடன் படுத்ததால், வந்த கெட்டகனவுகள்தான் அவை, அட எவ்வளவு மடத்தனமாக பீதியடைந்தேன். இனிமேல் தைரியமாக இருக்க வேண்டும்!!” எனக்குள் கூறிக்கொண்டேன்.

அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கழித்தேன். நகரின் எனது மனங்கவர்ந்த உணவகத்திற்கு சென்று, நன்றாக சாப்பிட்டேன். பிறகு திரையரங்கத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினேன். வீட்டிற்கு அருகே வந்தபோதுதான், மீண்டும் அந்த விசித்திரமான அசௌகர்யமான பய உணர்வு மீண்டும் பீடித்தது. அந்த மர்ம மனிதன் மீண்டும் தோன்றலாம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. சொல்லப் போனால், அவனிடம் பயமில்லை, அவன் அறைக்குள் இருக்கிறான் என நம்பவுமில்லை, அப்படியே உண்மையில் இருந்தால்கூட ஒன்றும் பயமில்லை, ஆனால் புதிய ரூபத்தில் அந்த அறையில் மீண்டும் மீண்டும் அவன் தோன்றி மறைவானோ என்ற பயம்தான். இனி என்றுமே நிகழக்கூடாது என நினக்கும் அந்த கெட்டகனவுகளின் மீதும் பயம்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, வீட்டிற்கு முன்னால் நடைபாதையில் இங்குமங்கும் நடந்தேன். அட என்ன மடத்தனம் இது!! என சமாதானம் சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அறையை நெருங்க நெருங்க இதயம் பதைபதைப்புடன் துடித்தது, மாடிப்படிகளில் வேண்டாவெறுப்பாக மெதுவாக ஊர்ந்து சென்று, அறையை நெருங்கினேன். அறைக்குள் நுழையப்பிடிக்காமல், பயத்துடன், அங்கு பத்து நிமிடங்களுக்கு மேலாக சுவரில் சாய்ந்து மோவாயை தடவி யோசித்துக்கொண்டிருந்தேன். சரி என்னதான் நடக்கும் என, தெம்பை வரவழைத்துக்கொண்டு, அறையின் கதவில் சாவியை நுழைத்து, பாதிக் கதவை மட்டும் உதைத்து படாரென திறந்தேன். கையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக் கொண்டு, கணப்பு தொட்டியை நோக்கி திக்கிதிணறி நோக்கினேன். ஆ!! அங்கு எதுவுமில்லை.
ஆகா!! என்ன ஒரு விடுதலை!! என்ன ஒரு விமோசனம்!!, இன்றுதான் என்னுடைய வாழ்நாளிலேயே பெருமகிழ்ச்சியான நாள்!! என மனதிற்குள் கூவிக்கொண்டே, இழந்து போன நம்பிக்கையை மீட்டெடுத்த களிப்பில், இங்குமங்கும் குதித்து குதித்து அறையை சுற்றி வந்தேன். ஆனால், எதிர்பாராத நேரத்தில், ஒரு நிழல் போல தெரிந்த அந்த மர்மமனிதனின் வருகை, என் நம்பிக்கையை சுக்கு நூறாக கிழித்தெறிந்து அச்சத்தில் வாயடைக்க செய்தது.
 

அன்றிரவு முழுவதும் தூக்கத்தில் ஒரு இடைவிடாத இரைச்சல் காது முழுக்க ஒலிப்பது போலிருந்தது. அதுதான் நான் கடைசியாக அந்த மர்மமனிதனை பார்த்த இரவு, அதற்குப் பின் அவன் தோன்றவேயில்லை.

ஆம், அன்று முதல்தான் ஒவ்வொரு இரவிலும் தனிமை என்னை அச்சுறுத்தி துரத்துகிறது. என் கண்முன் தோன்றாவிட்டாலும், அந்த ஆவிமனிதன் என்னை எப்போதும் சுற்றி கொண்டுயிருப்பதாக உணருகிறேன். அப்படியே அவன் மீண்டும் வந்தாலும், என்ன ஆகும்? எனக்கு கண்டிப்பாக தெரியும் அப்படி ஒருவன் இல்லவே இல்லை.

ஆனாலும்,  இடைவிடாது துரத்தும் அவனது நினைவுகள் தான் என்னை அச்சமூட்டுகின்றன. “இடது பக்கம் தலையை சாய்த்து, இரண்டு கால்களையும் மடித்து வைத்து, வலது கையை மட்டும் கீழே தொங்கபோட்டு அமர்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.” போதும் நிறுத்து!!  கடவுளின் பெயரால், அவனைப் பற்றி நான் நினைக்கவே விரும்பவில்லை.

ஏன் விடாப்பிடியாக அவனின் நினைவுகள் என்னை துரத்துகின்றன. “தேய்ந்து போன கால்களுடன், நெருப்பிற்கு அருகில் அமர்ந்திருந்தான்”. போதும்!!

ஓயாது நினைவுகளில் வந்து என்னை துரத்தும் அவன். யார்? எங்கிருக்கிறான்? எனக்கு தெரியும் என் மடத்தனமான கற்பனை உலகிலன்றி வேறெங்கும் அவனில்லை. என் துயர்மிகு கெட்ட கனவுகளிலன்றி வேறெங்குமில்லை அவன்.

என்னுடைய வீட்டிற்குள் என்னால் இனிமேல் தனியாக இருக்கவே இயாலாது,  அவன் என் முன்னால் இனிமேல் தோன்றவே மாட்டானென உறுதியாக நான் நம்பினாலும், அவன் அங்கு என் அறைக்குள்தான் இருக்கிறான். என் நினைவிற்குள்தான் இருக்கிறான். கண்ணுக்கு தெரியாவிட்டாலும், இந்த கதவுகளுக்குப் பின்னால், அலமாரிக்குப் பின்னால்,  என் படுக்கைக்கு அடியில், என் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு பின்னால்,  இந்த அறையின் எல்லா இருண்ட மூலைகளிலும் அவன் இருக்கிறான். மெழுவர்த்தியை ஏந்திக்கொண்டு, கதவுகளை திறக்கும்போதும், படுக்கைக்கு கீழே பார்க்கும்போதும், அவன் அப்போதும் இல்லைதான், ஆனாலும் எனக்கு பின்னால் அவன் இருப்பதை நான் உறுதியாக உணருகிறேன். திரும்பி திரும்பி சுற்றி பார்த்தாலும் அவன் அறுதியாக இல்லைதான், ஆனால் எப்போதும் என் பின்னால் அவன் இருப்பதாகவே தொன்றுகிறது. இது மடத்தனம், பைத்தியக்காரத்தனம், ஆனாலும் என்னால் என்ன செய்ய இயலும்? ஆம், அந்த அறையில் எனக்கு துணையாக இன்னொருவர் இருந்தால் மட்டுமே, அவன் அந்த அறைக்கு மட்டுமல்ல, என் நினைவிற்கே வரமாட்டான். ஆம். நான் அங்கு தனியாக இருப்பாதால் மாத்திரமே அங்கு இருக்கிறான்.

<முற்றும்>